தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சுந்தரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகள் உமாமகேஸ்வரி (18). இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் லேப் டெக்னீசியன் மையத்தில் படித்து வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில் விருதுநகர் மாவட்டம் சிவனாந்தபுரத்தைச் சேர்ந்த ராஜாமூர்த்தி குடியிருந்து வருகிறார். ராஜாமூர்த்தி வேளாண்மைத் துறையில் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ராஜாமூர்த்திக்கும் உமாமகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஆறு மாத காலமாக காதலித்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த செப்டம்டர் 23ஆம் தேதி இரு வீட்டாருக்கும் தெரியாமல் உமா மகேஸ்வரியும் ராஜாமூர்த்தியும் திருமணம் செய்துள்ளனர். தனது வீட்டில் உள்ளவர்களிடம் பேசி, ஒரு மாதத்திற்குள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உமாவிடம் ராஜா வாக்கு கொடுத்துள்ளார்.
ஆனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்த தகவல் ராஜாமூர்த்தியின் உறவினரான பவுன்ராஜுக்கு (ஓய்வுபெற்ற காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்) தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ராஜாமூர்த்தியை அடித்து இழுத்துச் சென்றுள்ளார். அழைத்துச் செல்லும்போது உமாமகேஸ்வரியின் குடும்பத்தினரையும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இதன்பிறகே, காதல் தம்பதியின் வீட்டார்களுக்குத் திருமணம் செய்துகொண்ட தகவல் தெரிந்துள்ளது.