தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், கயத்தாறு, புதூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி அமைதியாக நடைபெற்று வந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவலர்கள் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஒட்டப்பிடாரம் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திமுக பிரமுகர் இளையராஜா தரப்பினருக்கும் ஒட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாசாணசாமி மனைவி லதா தரப்பினருக்கும் இடையை இன்று நண்பகல் வாக்கில் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இச்சம்பவத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லதா என்பவரின் கணவர் உட்பட நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த அசம்பாவிதத்தில் இளையராஜா தரப்பைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பச்சை பெருமாள், ஜெயமுருகன் மற்றும் மற்றொருவர் பலத்த காயமடைந்ததனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் பதவிப் போட்டி: ஒட்டப்பிடாரத்தில் ஒருவர் வெட்டிக்கொலை 3 பேர் படுகாயம் காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காவலர்கள் தனிப்படை அமைத்து மோதலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்குச்சாவடியில் மின்தடை - டார்ச் லைட்டுடன் வந்து வாக்களித்த தங்கதமிழ்செல்வன்!