தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஒருநபர் ஆணையத்தின் விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒருநபர் ஆணைய விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என அந்த ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

By

Published : Aug 28, 2021, 1:07 PM IST

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணைய அலுவலர்கள் மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

813 சாட்சிகளின் வாக்குமூலம்

அதன்படி ஏற்கனவே 28 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 813 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர்

இந்நிலையில், 29ஆம் கட்ட விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இதில் மனித உரிமை வழக்கறிஞர் ஹென்றி டிபேன் உள்பட 58 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணையின் கடைசி நாளான‌ நேற்று, ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "29ஆவது கட்ட விசாரணைக்காக 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 51 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

1209 பேருக்கு சம்மன்

இதுவரை மொத்தம் 1209 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 863 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 1,179 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

30ஆவது கட்ட விசாரணை செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதில், கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட காவல் துறையினர், ஸ்டெர்லைட் குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது‌. சுமார் 120 பேரிடம் விளக்கம் பெற திட்டமிட்டுள்ளோம்.

விசாரணை முடிப்பதில் தாமதம்

கலவரத்தில் தொடர்புடையவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வருவதால், சம்மன் அனுப்பப்பட்ட சாட்சிகள் ஆஜராகி விளக்கமளிக்க உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டி உள்ளதால் விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. முழு விசாரணையும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என நம்புகிறோம்.

ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா?

நடிகர் ரஜினிகாந்த் கடந்தமுறை ஆணையத்தில் அளித்த விளக்கத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவர் சொன்ன கருத்துகள் அனைத்தும் நேரடியான தகவல்கள் வாயிலாக பெறப்பட்டவை அல்ல என்றும் இரண்டாம்தர தகவல்கள் மூலம் பெறப்பட்டவை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவது பற்றி ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கும்.

பெரிய சாட்சிகள்

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதலிலேயே மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் போன்ற பெரிய சாட்சிகளை விசாரிக்க முடியாது.

அவர்களை ஆரம்ப கட்டத்தில் விசாரிப்பது சரியான நடைமுறையும் கிடையாது. எனவே இறுதியாகவே அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். கலவரம் குறித்து இன்னும் 200 சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details