டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண வசூல், சாலை வரி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ஜனநாயக தரைவழிப் போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் பொது தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் சகாயம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், ’’கரோனா ஊரடங்கு காலத்திலும் டீசல் விலை 15 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 15 விழுக்காட்டிற்கும் மேல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது, லாரி தொழிலை நஷ்டமடையச் செய்துள்ளது.
இதுதவிர, சாலை வரி உயர்வு, லாரிகளுக்கான மாதத் தவணைகள் உள்ளிட்டவை லாரி உரிமையாளர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளன. இதுகுறித்துப் பலமுறை அரசுக்கு மனு அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இன்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்தாயிரம் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் சரக்குகள் தேக்கமடையும். உப்பு உற்பத்தி முதலான பணிகளும் பாதிக்கும்.