கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி உள்பட தமிழ்நாட்டின் தென்பகுதி கடற்கரையோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபடியான மழைப்பொழிவு பதிவானது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும் மழை வெள்ளம் பொதுமக்களை பெருமளவு பாதித்துள்ளது. முத்தையாபுரத்தை அடுத்துள்ள சூசை நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி மேடான இடத்தில் டெண்ட் அமைத்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
இடுப்பளவுக்கு தேங்கி நிற்கும் வெள்ளத்தால் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர், நாற்காலி, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கனமழைக்கு அப்பகுதியில் சொள்ளமுத்து(வயது70) என்ற மூதாட்டி பலியாகியுள்ளார். நடக்க முடியாத நிலையில் இருந்த அவர், வீட்டில் புகுந்திருந்த தண்ணீரால் கட்டிலை விட்டு கீழே இறங்க முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் கடுங்குளிர் காரணமாக நேற்று இரவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகே உள்ள மேடான பகுதிக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.