தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு காயல்பட்டிணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சையளிக்காமல் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இங்கு கரோனா வார்டில் அனுமதிப்பதற்கான 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டு அருகில் இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டனர். வீல்சேரில் சுமார் 2 மணிநேரம் அந்த முதியவர் இருந்தால் அவர் மயக்கம் அடைந்துள்ளார்.
பின்னர் வந்த உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததைத் தொடர்ந்து அவரை கரோனா வார்டில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவருக்கான கரோனா பரிசோதனை என்பது செய்யப்படவில்லை.
மேலும், எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை இந்த நிலையில் இன்று(ஜூலை.10) காலையில் மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகியுள்ளது . இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை வார்டில் அனுமதித்துள்ளனர்.
அங்கும் அவருக்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என அவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் இன்று மாலையில் திடீரென அவர் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக எந்தவிதமான பதிலையும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.