தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் நீதிபால்ராஜ். முதியவரான இவர், உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். பின்னர் இவருக்கு கரோனா பரிசோதனை மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் முதியவரின் உடலைக் கேட்டு பிரச்னை செய்யவே, மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தது. அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில், கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூலை 15) தெரியவந்தது. இதனிடையே, முதியவரின் உடல் நேற்று (ஜூலை 14) காலை 10 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தூத்துக்குடி மையவாடியில் எரியூட்டப்பட்டது.