தூத்துக்குடியில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆரை திரும்பப் பெற வலியுறுத்தி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சி.ஏ.ஏ. எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ஜெகத்கஸ்பர், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கண்டனங்களைப் பதிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கெளதமன், ' நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 78 இஸ்லாமியர்கள் மரணமடைந்துள்ளனர். 16 மாநிலங்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் இயற்றியுள்ளது. பிகாரில் பாஜக கூட்டணியில் உள்ள அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் இயற்றி உள்ள நிலையில் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளாவும்கூட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றியுள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு தற்போதுவரை தீர்மானம் இயற்றவில்லை. எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்.
நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் வன்முறையை கட்டவிழ்க்கப்பட்டால், இந்திய ஒன்றியத்துக்கான இறையாண்மை சீர்கெட்டுப் போகும். தமிழ்நாடு அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் இயற்றினால் ஆட்சி கலைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியிருப்பது தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். எனவே ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்' என்றார்.