எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்யாதது திமுக மீது சந்தேகத்தை எற்படுத்துகிறது - திருமுருகன் காந்தி தூத்துக்குடி:கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் 5ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.
அதனடிப்படையில், நேற்று இரவு தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில், வணிகர் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, வழக்கறிஞர் அதிசயகுமார் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது.
அதில் சிறப்பு அழைப்பாளராக, மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநரும், மூத்த வழக்கறிஞருமான ஹென்றி டிஃபேன் மற்றும் மே 17 இயக்க ஒருக்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், தமிழக அரசு ஸ்டெர்லைட்டை எந்த ஒரு சூழலிலும் இயங்க அனுமதிக்க கூடாது. தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஆணையமான ஓய்வு பெற்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரைப்படி 2018 மே 22 இல் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். தூத்துக்குடி மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து தூத்துக்குடி மண்ணில் இந்த மண்ணையும், மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் போன்ற தீர்மானம் இயற்றப்பட்டது.
அதன் பின் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “ஸ்டெர்லைட் படுகொலை நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றது. நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி, அதிகாரிகள் இந்த படுகொலையை நடத்தி இருக்கின்றார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
நீதியரசர் அறிக்கை வெளிவந்த பின்பு கூட புலனாய்வு நடத்தப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் படுகொலையில் பங்கேற்றவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. திமுக அரசு உடனடியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், அதிகாரிகள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பது மட்டுமல்ல நீதி, குற்றவாளிக்குத் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் அதுவே நீதி ஆகும். அப்படி இல்லையேன்றால் குற்றம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். அப்படியான குற்றம் நடந்துகொண்டே இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், அவ்வாறு நிறுத்தப்பட்டால் மட்டும்தான் முழுமையான நீதி கிடைத்ததாக அறியப்படும்.
இப்படிப்பட்ட நிலைமையில் மே 22 படுகொலை நடந்த நாளில் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திப்பதற்கு ஊர்வலம் நடத்துகிறார். ஸ்டெர்லைட் சம்பவம் வெளியில் வரக்கூடாது. அதன் மூலம் பெயர் மறுபடியும் கொலை வழக்கு குற்றச்சாட்டு அடிபடும் என்ற காரணத்தினால் திசை திருப்புவதற்காகவே தான் அந்த தினத்தை தேர்ந்தெடுத்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யாமல் திமுக அரசு தாமதமாக்கி கொண்டு இருப்பது வருத்தத்தை அளிப்பதாகும். திமுக அரசு உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் குற்றம் தொடர்ச்சியாக மேலும் நடக்கும் வாய்ப்பு உருவாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இது குறித்தான நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த வழக்கை பதிவு செய்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்த மாதிரி, இவ்வளவு ஆதாரம் இருந்தும் அவர் மீது நீங்கள் கொலை வழக்குப் பதிவு செய்யாதது என்பது சந்தேகத்தை கொடுக்கின்றது.
ஆகவே, இந்த விஷயத்தை தாமதப்படுத்துவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு காப்பாற்ற வேண்டாம். தமிழக ஆளுநர் தமிழர்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருப்பவர், தமிழக மக்கள் இதனை பொருட்படுத்தவில்லை. இவர் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அல்ல, தமிழர்களுக்கு யார் என்று தெரியாத நபர், அவர் அப்படி பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம்” என்றார்.
வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன் கூறுகையில், “5ஆம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் சுமார் 2,200க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அழைத்து மக்கள் கூடுதலை குறைப்பதற்கு முயற்சி செய்தார்கள் என்ற ஆழ்ந்த வருத்தம் உள்ளது.
இது தூத்துக்குடி மக்களின் மாண்பிற்கு எதிரான ஒரு செயல், எந்த மக்களும் வன்முறையில் ஈடுபடவில்லை, வன்முறைகளுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஒரு நபர் கமிஷனர் அறிக்கை வந்த பின்பும் அதற்கு முரணாக நடக்கக்கூடிய காவல்துறையினைப் பார்த்தோம்.
திங்கள் கிழமை தோறும் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு அமைப்பினர் மனு அளித்து வருகின்றனர். குற்றவாளிகள் குற்றம் செய்து கொண்டே இருப்பார்கள். குற்றவாளிகள் பலவிதங்களில் குற்றம் செய்வார்கள். சீல் வைத்த கம்பெனிக்கு இது போன்ற செயல் செய்யக்கூடாது. திங்கள்கிழமைக்கு ஆட்களைத் திரட்டுவது என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அங்கு செல்வது சாதியின் அடிப்படையில் வேறு ஒரு அடையாளத்தைக் கொண்டு செல்லலாம் பிரச்னை இல்லை.
கள்ளச்சாராயத்தில் வேகமாக கைது செய்தார்கள் என்பது ஆட்சிக்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் தான். ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக திமுகவிற்கு எந்த ஒரு பயமும் இல்லை என்ற நிலை வந்து விட்டது. பல்வீர்சிங்கை பிடிப்பதுக்குக் கூட தைரியம் இல்லை. கண்டிப்பாக காவல்துறை மத்தியிலுள்ள உயர் காவல் துறை அதிகாரிகள் சிலர் முதலமைச்சரை கையில் வைத்துக்கொண்டு அதைத் தாண்டி செயல்படாமல் இருப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் என்பது தான் அம்பலமாகத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி... 5,500 மீது போலீசார் வழக்குப்பதிவு!