தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் மக்களுக்குப் பல நோய்ப் பாதிப்பு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது அதன் அடிப்படையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் வதந்திகள் எனக் கூறி அங்கு பணியாற்றும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைத் தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டனர்.
இதுகுறித்து, ஸ்டெர்லைட் ஆலையில் 25 வருடங்களாகப் பணி புரிந்த ஜெயா கூறுகையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயக்கம் தடைப்பட்டு மூடப்பட்டது. 27 வருடமாக ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வருகிறேன். முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால் ஆலையில் பணி செய்பவர்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. கருவிலேயே குழந்தைகளின் உயிர் பிரிகிறது என்ற குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள். அது துளியளவும் உண்மை இல்லை.
ஆலையில் 150 முதல் 200 வரையிலான பெண்கள் ஸ்டெர்லைட் ஆலையில் பணி செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று நல்ல நிலைமையில் உள்ளனர். எந்த ஒரு குறைபாடும் கிடையாது.
ஸ்டெர்லைட் ஆலையால் நோய் வரும் என்றால் ஸ்டெர்லைட் ஆலையில் பணி செய்தவருக்கு வந்திருக்க வேண்டும். அங்குள்ள குடும்பத்தாருக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் வரவில்லை. மக்கள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை நம்பக்கூடாது. அந்த பயத்திலிருந்து வெளியே வரவேண்டும்” என்றார்.
இதுகுறித்து, ஊழியர் மாரியப்பன் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையால் பிரச்சனை என்றால் முதலில் ஆலையில் பணி செய்த எங்களைத் தான் பாதித்திருக்கும். ஆனால் அப்படி இல்லை. சுற்றுப்புற சூழ்நிலை பேணி காக்க வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கத்திற்காக அனைத்து டெக்னாலஜி அமெரிக்காவிலிருந்து உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புறச் சூழலைப் பேணிக்காத்து வருகின்றோம்.
கம்பெனியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைத்தனர். அதாவது, புற்றுநோய் வரும், தொழிற்சாலை கழிவுகளைக் கடலில் கலக்கின்றனர். இதனால் மழை பெய்யவில்லை ஆகிய பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரங்கள் இன்றி முன் வைத்தனர்.