தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த தம்பதி மூன்றே நாளில் வெட்டிக் கொலை... பின்னணி என்ன? தூத்துக்குடி: கோவில்பட்டியை பூர்விகமாக கொண்டவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி மாநகரில் உள்ள முருகேசன் நகர் 1வது தெருவில் வசித்து வருகிறார். மேலும் இவர் லாரி லோடு மேன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது ஒரே மகனான மாரி செல்வம் (வயது 24), டிப்ளமோ படித்து விட்டு அருகே உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல், திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான கார்த்திகா (வயது 20), பட்டப்படிப்பு முடித்து உள்ளார்.
இந்த நிலையில், வசந்தகுமார் இதற்கு முன் திருவிக நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும், அப்போது முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவுக்கும், மாரிச்செல்வதிற்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் பெற்றோருக்கு தெரியவர பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாக சொல்லப்படுகிறது.
இதனால் இரு வீட்டாருக்கும் அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்துள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த 1 மாதத்திற்கு முன்பு வசந்தகுமார் குடும்பத்துடன் முருகேசன் நகர் பகுதிக்கு குடியேறியுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 30 ஆம் தேதி திடீரென மாரிச்செல்வம் - கார்த்திகா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊரான கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், உறவினர்கள் வீட்டில் இருந்து வந்த அவர்கள், நேற்று (நவ. 2) காலை 11 மணிக்கு தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, மாலை 3ம் மைல் பகுதியில் மாரிச்செல்வத்தை பெண்ணின் சித்தி மகன்களான, கருப்பசாமி, பரத், ராஜபாண்டி ஆகிய மூவரும் அரிவாளை கொண்டு வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர், அங்கிருந்து தப்பி ஓடிய தம்பதியினர் பத்திரமாக வீட்டிற்கு சென்று உள்ளனர். அதனையடுத்து மாலை 6.30 மணியளவில் மாரிச்செல்வம், கார்த்திகா இருவரும் வீட்டில் இருப்பதை அறிந்த 6 பேர், திடீரென வீட்டிற்குள் புகுந்து கணவன் மனைவியான இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளனர்.
இதனிடையே அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தபோது, அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த தம்பதியைக் கண்டு, அருகில் இருந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் நகர காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியராஜ், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் இறந்த தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கை ரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், மோப்ப நாய் ஜினோ வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு அருகில் இருந்த ரயில்வே கேட் வரை சென்று திரும்பியது, ஆனால் யாரையும் பிடிக்கவில்லை.
மேலும், இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க மூன்று தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு உள்ளனர். தற்போது போலீசார் பெண்ணின் தந்தையான முத்துராமலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில் கணவன் - மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் இறுதி அஞ்சலி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கார் - லாரி மோதலில் உருவான வார்த்தைப் போர்! நடுரோட்டில் டாக்டர் தம்பதி மீது தாக்குதல்! வீடியோ வைரல்!