தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் கணினி விற்பனையாளர் கார்த்திகேயன் (40), என்பவரது வீட்டில் கடந்த ஆண்டு இதே நாள் (11.01.2021) ரூ.3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கம் திருடு போகின.
இது குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த விவேக்ராஜா (30), என்பவர்தான் நகைகளை திருடியது தெரியவந்தது. காவல்துறையினர் விவேக்ராஜாவிடம் நடத்திய விசாரணையில், அவரும், கார்த்திகேயனும் பக்கத்து வீட்டுகாரர்கள் என்பதால் சம்பவத்தன்று, கார்த்திகேயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், அவர் வீட்டுசாவியை வழக்கமாக வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டு, வீட்டின் பீரோவிலிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் விவேக்ராஜாவை கைது செய்து அவரிடமிருந்த 11 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திட்டம் தீட்டிய கொள்ளையர்கள் - கட்டம் கட்டிய காவல்துறை!