தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி நாள் மாநாடு இந்த மாதம் வருகின்ற 18ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கு கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்றால் இன்று வரை அங்கு ஓடிக்கொண்டு தான் இருக்கும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம்? 1,558 பேர் கைது செய்து இருக்கீறீர்கள். அவர்களிடம் இழப்பீடு வழங்கி இருக்கலாம். மக்கள் வரிப்பணத்தை எவ்வாறு கொடுக்கலாம்.
நாட்டை பாதுகாத்தவர்களுக்கும், சிங்களர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும் ஏன் 10 லட்சம் கொடுக்கவில்லை. இந்திய ராணுவத்தில் நாட்டின் பாதுகாப்பு படை இளம் வீரர்கள் பஞ்சாப்பில் இரண்டு பேர் இறந்தார்கள். மத்திய அரசும் மாநில அரசும் அந்த குடும்பத்திற்கு என்ன நிதி அளித்தாகள். இது எந்த மாதிரியான செயல்.
வேங்கை வயலுக்கு உங்களால் போக முடியவில்லை. கள்ளச்சாராயம் குடித்தவர்களை சென்று பார்க்க போறீங்க. அப்போ அந்த செயலை ஊக்கப்படுத்தி இருக்கிறீர்களா? இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. அங்குள்ள மாமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், காவல்துறை அதிகாரிகள் என இவர்களுக்கு தெரியாமல் அங்கு இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் ஏன் பணியிட மாற்றம் செய்கிறீர்கள்.
சட்டசபையில் பிரான் ப்ராக்கை ஒழித்து விட்டோம். குட்காவை ஒழித்து விட்டோம் என்று கூறுகின்றனர். கள்ளச்சாரத்தை மக்களுக்கு கொடுத்து ஒழித்து விட்டிற்கள் போலும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு அருணா ஜெகதீசன் அறிக்கையில் எந்த நடவடிக்கையும் இல்லை.
மனு கொடுக்க வந்த மக்கள் கலவரம் செய்வார்கள் என்று எப்படி நீங்கள் கணித்தீர்கள்? சுடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது யார்? எங்கே இருந்து உத்தர வந்தது? எப்படி நீங்கள் தயாரானீர்கள் என்று தெரிந்து கொள்ள நினைக்கின்றோம். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்களுக்கு பணியிடம் மாற்றம் கொடுத்து விட்டீர்கள். சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என ஆவேசமாக பதிலளித்தார்.