கோவில்பட்டி அருகேயுள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் நகுலன் (6). அங்குள்ள தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த சிறுவன், பள்ளி விடுமுறையையொட்டி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென காணாததால், பதற்றமடைந்த பெற்றோர் நகுலனை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததையடுத்து, பெற்றோர் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
மேலும், அதே ஊரைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருள்ராஜைப் பிடித்து காவலர்கள் விசாரித்ததில், சிறுவனை அடித்துக் கொலை செய்ததாகவும் உடலை எங்கு வீசினேன் என்று தெரியவில்லையென்றும் கூறியுள்ளார். அருள்ராஜிடம் காவலர்கள் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்ட பின்பு, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுவனின் உடலைக் காட்டுப்பகுதியில் கண்டெடுத்தனர். இதன்பிறகு சிறுவனின் உடல் உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.