கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டு கரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் பக்தர்கள் பங்கேற்பின்றி கடந்த செவ்வாய்கிழமை மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. மேலும், முத்தாரம்மன் கோயில் வரலாற்றையும், கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்யவும், "குலசேகரன்பட்டினம் டெம்பிள்" என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், குலசேகரன்பட்டினம் கோயில் இணையதளத்தில் சமூகவிரோதிகள் சிலர் ஊடுருவி அதை சர்ச் என்று மாற்றியுள்ளதாக, கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாயின. இந்தக் கோயிலில் மாற்று மதத்தினர் நிர்வாக பொறுப்பில் இருப்பதாகவும் இணையதளத்தில் தகவல் பரவியது.
இது குறித்து கோயில் நிர்வாக அலுவலரிடம், உதவி ஆணையருமான ரத்தின வேல்பாண்டியன் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.