மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் முகமது இஸ்மாயில் ஆலிம் தலைமை தாங்கினார்.
அப்போது மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராகக் கண்டன பதாகைகளை ஏந்திப் பேரணியாக வந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக ரஹ்மான் ஆலிம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியத்திற்கு எதிராக முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ளது. மதத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் வேறுபடுத்துவற்காக மத்திய அரசு இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்பாட்டம் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்து அரசியலமைப்பின் புனிதத்தை கெடுத்துவிட்டது. இதை அடிமட்டத்திலேயே எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்" என்றார்.