தூத்துக்குடியில் கண்மாயில் செல்லும் வெண் நுரையை தண்ணீர் ஊற்றி அகற்றிய தூய்மை பணியாளர்கள் தூத்துக்குடி:மூப்பன்பட்டியில் உள்ள இரண்டு கண்மாய்களில் நீர் நிரம்பி குறிஞ்சம்குளம் கண்மாய்க்கு தண்ணீர் மறுகால் சென்று வரும் நிலையில், நீர்வரத்து கால்வாயில் சென்ற வெண்நுரையை நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் ஊற்றியும், குச்சிகளைக் கொண்டும் அழிக்க முயற்சி செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், மூப்பன்பட்டியில் உள்ள இரண்டு கண்மாய்களில் நீர் நிரம்பி, சங்கலிங்கபுரம் வழியாக குறிஞ்சம்குளம் கண்மாய்க்கு தண்ணீர் மறுகால் சென்று வருகிறது. அவ்வாறு செல்லும் தண்ணீர், வெண் பஞ்சு போன்று நுரை தள்ளியவாறு செல்கிறது.
இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஆலைக்கழிவுகள், நீருடன் கலப்பதால் வெண் நுரை செல்வது மட்டுமின்றி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் சுமார் 500 ஏக்கரில் விவசாயப் பணிகள் சரிவர மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:சட்டென்று மாறிய வானிலை.. டெல்லியில் திடீர் மழை - காற்று மாசு சற்று நீங்கலாக காட்சியளிக்கும் தலைநகரம்!
இந்நிலையில், நீர்வரத்து கால்வாயில் அதிக வெண்நுரையுடன் தண்ணீர் செல்லும் நிலையில், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் நீர்வரத்து கால்வாயில் செல்லும் தண்ணீரை வெண்நுரை மீது ஊற்றினர். நீண்ட நேரம் நுரை மீது தண்ணீர் ஊற்றியும், வெண் நுரை அதிகமாக வந்ததால் வாருகால் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் குச்சிகளைக் கொண்டு நுரைகளை அழிக்க முயற்சி செய்தனர்.
கண்மாய்களில், ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், நகராட்சி தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அழிக்க நினைத்த சம்பவம் வேடிக்கையாக இருந்ததாக தெரிவித்த பொதுமக்கள், தங்களுக்கு நிரந்தர தீர்வு காண அரசும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - டிச.6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!