நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் சாலை வழியாக தூத்துக்குடியிலிருந்து நெல்லை மாவட்டம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கையில், "பாஜக மறுமுறை ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பெரிய முயற்சி எடுத்திருக்கிறார்கள்.
ஒரு மொழி, ஒரு மதம் என்று அவர்கள் நினைக்கக்கூடிய அடையாளத்திற்குள் இந்த நாட்டை கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு முகம்தான் ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டம். இது மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை பறித்துக்கொள்ளும் வகையில் இருக்கிறது. இதை திமுக தலைவர் ஸ்டாலினும், திமுகவும் தொடர்ந்து எதிர்த்துவருகிறது.
திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்து கேட்டபோது அமைச்சர் ஜெயக்குமாரின் தவறான, நாகரிகமற்ற பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அதிமுகவே பலமுறை இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கையில் எடுத்து நடத்தியிருக்கிறார்கள். அதனுடைய சரித்திரம் அவர்களுக்கு தெரிந்தால் இப்படி பேச மாட்டார்கள்" என்று கூறினார்.