தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினுக்கு மக்கள் பாதுகாப்பே போதும்; இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை: கனிமொழி - தூத்துக்குடியில் பேசிய கனிமொழி

தூத்துக்குடி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பாதுகாப்பே அரணாக இருக்கும் போது இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி
செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி

By

Published : Jan 10, 2020, 3:16 PM IST

திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்த்து நின்று போராடி கொண்டிருக்கிறோம். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது என்று தெரிந்த பிறகும் தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசு மசோதாவை ஆதரித்து வருகிறது.

இது இங்கு இருக்கக்கூடிய சிறுபான்மை மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யக்கூடிய அளவில் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் மசோதாவை ஆதரித்து நிறைவேற்றுவதற்கு அதிமுக அரசு உதவி புரிந்திருக்கிறது.

மாநிலங்களவையில் இந்த சட்டத்தை எதிர்த்து அதிமுக குரல் கொடுத்திருந்தால் மத்திய அரசால் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியாது. தொடர்ந்து, இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சூழலை உருவாக்கியதற்கு அதிமுக தான் காரணம்.

தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டதுக்கு எதிராகப் போராடக் கூடியவர்கள் எந்த அளவுக்கு அடக்குமுறைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது தெரியும். சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி செயல்பட்டு வருகிறது.

கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது என்பது மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு சமூக தலைவர், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக போராடுவதால் அவரை அச்சுறுத்துவதற்காக பாதுகாப்பை ரத்து செய்யும் நடவடிக்கையாக இருக்கிறது.

இதில், கண்துடைப்புக்காக துணை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பாதுகாப்பே அரணாக இருக்கும்போது மற்ற எந்த பாதுகாப்பும் தேவையில்லை. ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் விரோத நடவடிக்கையை செய்து வருகின்றனர். எனவே அவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தான் பாதுகாப்புத் தேவை என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது தான் மத்திய அரசின் நோக்கம்: திருநாவுக்கரசர்

ABOUT THE AUTHOR

...view details