தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்’ - கனிமொழி உறுதி! - MP Kanimozhi inaugurate Hi Mass light at various places in the district

பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என்றும், இவற்றைப் பார்க்கும்போது இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுவதாகவும் கனிமொழி வேதனைத் தெரிவித்துள்ளார்.

உயர் கோபுர மின்விளக்குகளைத் தொடங்கி வைத்துப் பேசிய எம்பி கனிமொழி
உயர் கோபுர மின்விளக்குகளைத் தொடங்கி வைத்துப் பேசிய எம்பி கனிமொழி

By

Published : Oct 2, 2020, 2:29 AM IST

தூத்துக்குடி :மாநகராட்சிப் பகுதியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்குகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (அக்.01) நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மின் விளக்குகளைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கீதா ஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இனிகோ நகர், திரேஸ்புரம் சந்திப்பு, பூபால்ராயபுரம், ஒன்றாம் ரயில்வே கேட் உள்ளிட்ட எட்டு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுர விளக்குகளை கனிமொழி திறந்து வைத்துப் பேசினார்.

அப்போது, ”தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் எந்தவொரு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் தான் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. நீட் தேர்வைக் கொண்டுவந்து மாணவர்களின் மருத்துவக் கனவை அதிமுகவினர் தகர்த்தார்கள், புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து மொழித் திணிப்பை ஆதரிக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் தலையாட்டி அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்ற தமிழ்நாட்டில் விரைவில் திமுக தலைமையிலான ஆட்சி மாற்றம் வரும். இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுப்போம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி ”நாட்டில் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. பாலியல் சம்பவங்களில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் கைது செய்வதற்குக் கூட தயங்கும் சூழ்நிலையை பல்வேறு இடங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உத்தரப்பிரதேசத்தில் இரண்டு தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க அவரது குடும்பத்தார்கூட வர முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டு, அந்தப் பெண்ணுடைய உடல் எரிக்கப்பட்டு, சில தடயங்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் யாரை அவர்கள் பாதுகாக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என்றால், இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வி நம் அத்தனை பேருக்குள்ளும் எழுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது. கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவ வசதிகள் அதிகம் தேவைப்படும் இந்த நேரத்தில், மத்திய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரித்துக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் முற்றிலுமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் அதிகரித்துத் தர வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details