தமிழர்களின் வரலாற்றில் மூக்கை நுழைக்க துவங்கியுள்ளனர் - எம்.பி கனிமொழி தூத்துக்குடிவடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி சார்பாக மாபெரும் சமத்துவ பொங்கல் விழா திரேஸ்புரம் பகுதி 6வது வார்டு பாக்கியநாதன் விளையில் நடைபெற்றது. இந்த விழாவினை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி பேசும்போது, “தமிழக ஆளுநர் இப்பொழுது தமிழ்நாட்டை தமிழகம் என்று கூற வேண்டியது தானே என கூறுவது. அவர்கள் ஒவ்வொன்றையும் தமிழர்களின் அடையாளங்களை கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை, பண்பாட்டை வரலாறு ஆகியவற்றில் மூக்கை நுழைக்க துவங்கி இருக்கிறனர்.
இந்த காலகட்டத்தில் நாம் பெருமையாக தமிழர்களாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக கொண்டாட கூடிய விழா பொங்கல் விழா. இந்த காலகட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் சூளுரை ஏற்க வேண்டி உள்ளது. நாம் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் பெருமைகளை, தமிழர்களின் அடையாளங்களை, பண்பாடுகளை, திறமைகளை, கலாச்சாரத்தை, பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்க வேண்டும்” என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மக்களுடன் எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சமத்துவ பொங்கல் வைத்தனர்.
இதையும் படிங்க: ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை