தூத்துக்குடி:தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று (டிச.29) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் அவர்களின் மறைவு என்பது தமிழக அரசியலுக்கு மட்டும் அல்லாமல், அவரைத் தெரிந்த எல்லோருக்குமே பெரிய இழப்பு.
எந்த உயரத்தில் இருந்தாலும், தான் ஒரு சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத ஒரு மாமனிதர் அவர். எப்போதும் மக்கள் மீதும், எளியவர்கள் மீது அக்கறையுடன் இருப்பார். தனக்கு ஒரு காலகட்டத்தில் உதவியவர்களை எந்த காலத்திலும் மறக்காதவர், அவர்களோடு உறுதுணையாக நிற்கக்கூடிய மனிதர் தான், 'புரட்சிக் கலைஞர்' விஜயகாந்த்.
அவரது அரசியல் பயணம் என்பது மக்கள் மீது அக்கறை கொண்ட பயணம். அவர் நடித்த திரைப்படங்கள் கூட சமூக உணர்வு, திராவிட உணர்வு, மக்கள் மீது வைத்திருக்கக் கூடிய அன்பு என்ற மையக்கருத்தைத் தான், திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. அவரது வாழ்க்கையும், தமிழ் இனம் என்பதைத் தான் பற்றிக்கொண்டு இருந்தது.