தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மாபெரும் 'தமிழ் கனவு' நிகழ்ச்சி நேற்று (செப். 8) நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பின்னர் 'நாமும் கல்வியும்' என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசுகையில், "தமிழகம் எப்போதும் எழுத்தை, கல்வியை கொண்டாடக்கூடிய மாநிலமாக இருந்துள்ளது. தமிழகத்தில் நம் முன்னோர்கள் கல்வி என்பது அனைவருக்கும் சமம் என்றனர்.
இதை தான் ஒளவையார், திருவள்ளுவர் தங்களது பாடல் வரிகள் மூலமாக கூறுகின்றனர். கல்வியை கொண்டாடிய மக்கள் வாழ்ந்த நாடு தான் தமிழகம். கீழடியில் பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் தான் அகழ்வாரய்ச்சி தொடரப்பட்டது. கீழடி அருங்காட்சியகம் நம்முடைய பெருமை. பாறைகளிலும், ஓடுகளிலும் 2 ஆயிரத்து 400 ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட தமிழி என்ற நம்முடைய எழுத்து முறை கிடைத்துள்ளது. அப்போதே, எல்லோருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது.
கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட அகழ்வாரய்ச்சி இடங்களை நீங்கள் போய் பார்க்கவேண்டும்" என்றார். தொடர்ந்து கனிமொழி, மாணவர்களை பார்த்து எத்தனை பேர் இந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அனைவரும் மௌனமாக இருக்க எத்தனை பேர் ஜெயிலர் படத்தினை பார்த்துள்ளீர்கள் என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.