தூத்துக்குடி:கோவில்பட்டி அருகேவுள்ள காமநாயக்கன்பட்டியில் தமிழின் பெருங்காப்பியமான தேம்பாவணி தந்த வீரமாமுனிவர் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில்; “தமிழர்களுக்காக, மக்களுக்காக செய்து தந்திருக்கக்கூடிய மிகப்பெரிய பணியை நமக்கு தந்திருக்கக் கூடியவர் நம்முடைய வீரமாமுனிவர். அந்த வகையிலே அவரை போற்றக்கூடிய வகையிலே நம்முடைய அரசு அவருக்கான மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை நட்டியுள்ளோம்.
நாம் வெவ்வேறு பகுதிகளிலோ வேற நாடுகளிலோ வாழக்கூடியவர்களாக கூட இருக்கலாம் ஆனால் நாம் தமிழால் இணைக்கப்பட்டவர்கள். நமக்கும் வெளி நாட்டில் இருந்து வந்த வீரமாமுனிவர்க்கும் இருக்கக்கூடிய உறவு என்பது தமிழ் மொழியில் தான் நம் தமிழ் மீது இருக்கக்கூடிய அன்பு அவர் தமிழுக்காக ஆற்றி இருக்கக்கூடிய பணிகள் இதுதான் நம்மை இனமாக கட்டிப்போட்டு உள்ளது.