தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று (டிச. 07) பாஜக மாநில தலைவர் முருகன் கடந்த ஒரு மாதமாக நடத்திய வேல் யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் நான்காவது முறையாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசை வீழ்த்தி முதலமைச்சராகியுள்ளேன். முருகன் அவமானப்படுத்தப்பட்டதை எதிர்த்து இந்த யாத்திரை நடத்திய முருகனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற அசுர சக்திகளை, நாத்திக சக்திகளை, தேசவிரோத சக்திகளை வேறோடு அழிப்பதற்காக இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. எப்போதெல்லாம் தமிழ்நாடு மக்கள் சிரமப்படுகிறார்களோ அப்போதெல்லாம் நான் தமிழ்நாடு வருவேன். சுனாமி வந்தபோது தமிழ்நாட்டிற்கு வந்து 400 வீடுகள் கட்டி கொடுத்திருக்கிறேன்.
கறுப்பர் கூட்டம் என்கிற முட்டாள் கூட்டத்திற்கு ஒரு எச்சரிக்கைவிடுக்கிறேன், அவர்கள் எங்கள் வழியில் குறுக்கிட்டால் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இந்த நாட்டில் ஆன்மிகமும், பக்தியும் இல்லாமல் யாரும் பூரணமாக முடியாது. நான் உங்களை மீண்டும் எச்சரிக்கிறேன் பண்பாடு, கலாசாரத்தின் மீது காயப்படுத்தினால் உங்களுக்கு எதிராக மக்கள் திரண்டுவருவார்கள்.