தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சம் காணும் நிலையில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 143 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்றின் தீவிரத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு உதவும் இக்லியா எனும் தானியங்கி பரிசோதனைக் கருவியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், உறைவிட மருத்துவர் சைலஸ் உள்பட பலரும் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்த 18 பேரை வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.