ஸ்ரீவைகுண்டம் :தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செய்துங்கநல்லூர் சிவன் கோவிலுக்கு கீழ்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. மேலும் 200 ஏக்கரில் நெல் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது தரிசு நிலமாக உள்ளது. இந்த நிலையில் இந்த வாழைத்தோட்டத்தின் பகுதியில் இன்று(ஆகஸ்ட் 7ஆம் தேதி) மதியம் திடீரென தீ பிடித்து உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்த விவசாயிகள் அருகில் இருந்த மோட்டார் செட் மூலம் தண்ணீர் ஊற்றி இந்த தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ வேகமாக அருகில் இருந்த வாழைத் தோட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. உடனே விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் மற்றொரு இடத்திற்கு தீ அணைக்க சென்று விட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளதாக தெரிகிறது.