தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு, திட்டப்பணிகள் கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகக் மேலாண்மை இயக்குநருமான பிரகாஷ் இன்று (ஜூன் 16) ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் பக்கிள்ஓடை ஜெயராஜ் ரோடு, சிவந்தாகுளம், திருச்செந்தூர் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர், கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு சந்தித்து கூறுகையில் ’’தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி பணிகளும் கிராமப்புறங்களில் முகாம் அமைத்து சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. தற்போது, தூத்துக்குடியில் தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கரோனாத் தொற்று பாதிப்பு ஆறு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வசதிக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 900 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, 550 படுக்கைகளுக்கு நிறைவு பெற்றுள்ளது. அரசு மருத்துவமனையில் 16 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொள்ளளவு உள்ள கொள்கலனும் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் கொள்ளளவு 1500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.