தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

VAO Murder: விஏஓ ஓடஓட வெட்டி படுகொலை; குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு - killed while on duty in Thoothukudi

அடையாளம் தெரியாத கும்பலால் பணி நேரத்தில், கோவில்பத்து விஏஓ ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 25, 2023, 5:38 PM IST

Updated : Apr 25, 2023, 7:53 PM IST

விஏஓ ஓடஓட வெட்டி படுகொலை; குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மீது சரமாரியான அரிவாள் வெட்டு நடத்தப்பட்டதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்ட லூர்து பிரான்சிஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், மருத்துவமனை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ளது கோவில்பத்து கிராமம். இதில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர், லூர்து பிரான்சிஸ். இவர் வழக்கம்போல, இன்றும் (ஏப்.25) தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபொழுது பிற்பகலில் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், அவரை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இந்த கொடூரத் தாக்குதலினால் ரத்த வெள்ளத்தில் சரிந்த லூர்து பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில், போராடிக் கொண்டிருந்தபோது, அங்கு இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்து உடனடியாக நிகழ்வு இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பேரில் ஒருவரை பிடித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், என்ன காரணத்திற்காக லூர்து பிரான்சிஸ் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது குறித்தும் காவல் துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நிகழ்வு இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். அதேபோன்று, காவல் நிலையத்திற்குச் சென்று விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு வரும் அதே வேளையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், வருவாய்த்துறை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த லூர்து பிரான்சிஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கிராம நிர்வாக அலுவலர் பணியின்போதே ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணியின் போது, கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து விஏஓ-வை இரண்டு நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து அரசு அதிகாரிகளும் அதிர்ந்து போய் உள்ளனர். மேலும், இந்தப் படுகொலையின் பின்னணியில் அப்பகுதியில் சட்டவிரோத மணல் கொள்ளையை உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் கண்டித்ததாகவும், இது குறித்து அவர் புகார் அளித்ததாகவும் இதனால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி அளிக்கப்படும்' என்று அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நேற்று திருமணத்தில் மது பரிமாறும் அனுமதி வாபஸ் - இன்று 500 டாஸ்மாக்கிற்கு மூடுவிழா பணிகள் துவக்கம்!

Last Updated : Apr 25, 2023, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details