தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளத்தில் தனியார் டிராக்டர் விற்பனை நிறுவன தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் தன்னுடைய வெளிநாட்டு பயணத்தில் எந்தெந்த நிறுவங்களை ஆய்வு செய்துள்ளார், என்ன ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது பற்றி வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
லண்டனில் உள்ள தமிழர்கள், தொழில் நிறுவனங்கள், அங்கு உள்ள மருத்துவமனை நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்து விரைவில் அங்கு உள்ளது போலவே தமிழ்நாட்டிலும் ஏர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி, வெளிநாட்டுக்கு இணையான மருத்துவ வசதியை கொண்டு வருவதற்கான முயற்சி எடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து பேசிய அமைச்சர், அமமுகவில் புதியதாக மாவட்டச் செயலாளர்களை தினகரன் நியமிக்கவில்லை என்றும் அக்கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்து விட்டதாகவும் தெரிவித்தார். தாங்கள் அமமுகவை ஓர் இயக்கமாகவோ, அதிமுகவுக்குப் போட்டியாகவோ நினைக்கவில்லை எனவும் கூறினார்.
திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி, திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தவும், திரையரங்கில் பார்க்கிங் கட்டணத்தை வரைமுறை படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் இனி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்வதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.