தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவந்திபட்டியை அடுத்துள்ள தீத்தாம்பட்டியில் உள்ள கரிசல்குளம் கண்மாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கண்மாயை தூர்வாரும் பணிகளுக்கான பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், காளாம்பட்டி ஊராட்சி அழகப்பபுரத்தில் உள்ள கண்மாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளையும் ஆரம்பித்துவைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தேவையில்லாமல் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டால்தான் கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தற்போது கிராம நீர்நிலைகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார அறிவித்துள்ளது. கடந்தாண்டு இந்த திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டதால் கடந்த ஆண்டு சராசரி அளவைவிட 42 விழுக்காடு அதிகமாக பருவமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் தேங்கி விவாசயத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
இதேபோல் இந்தாண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 14 பணிகளுக்கான ஏழு கோடி ரூபாயை அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. மேலும் இம்மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாருவதற்கான விவரப் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதலமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரின் அனுமதி பெற்றவுடன் அந்த நீர்நிலைகளும் தூர்வார அரசு நிதி ஒதுக்கும்” என்றார்.