அமைச்சர் சேகர் பாபு பேட்டி தூத்துக்குடி:உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் 'கந்த சஷ்டி' திருவிழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'சூரசம்ஹாரம்' வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த கந்த சஷ்டி திருவிழாவில், தமிழகம் மட்டுமன்றி பல்வேறு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வர். இந்த நிலையில், திருவிழா ஏற்பாடுகள் குறித்து இன்று (நவ.6) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா அனைத்து பக்தர்களும் காணும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும், திராவிட மாடல் அரசு செய்துவருகிறது.
கோயிலில் நடந்துவரும் பணிகள் 35% நிறைவடைந்தன. அறநிலையத்துறை சார்பில் ரூ.99.50 கோடி மதிப்பில் 18 பணிகள் வரும் கார்த்திகை மாதம் தொடங்கப்பட உள்ளது. மேலும், பெருந்திட்ட பணிகளும், திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், கந்த சஷ்டியில் நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் உள் பிரகாரத்தில் தங்கி விரதமிருக்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், திருவிழா நாட்களில் உள்ளூர் பக்தர்களுக்குச் சிறப்பு அனுமதி இல்லை. பக்தர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடைமுறைதான் என்றும் உள்ளூர் பக்தர்கள் வெளியூர் பக்தர்கள் எனப் பிரித்துப் பார்க்கமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். அதோடு, பக்தர்கள் விரதம் இருப்பதற்கு வசதியாக 21 இடங்களில் 30 ஆயிரம் பேர் தங்குவதற்கு தற்காலிக கொட்டகை அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சூரசம்ஹாரம்; 20 லட்சம் பக்தர்கள் வரலாம்:தொடர்ந்து பேசிய அவர், “மேலும், சஷ்டி நாட்களில் நாளொன்றுக்கு 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் எனவும் சூரசம்ஹாரம் அன்று மட்டும் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் எனவும் திருவிழா நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறினார்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக 16 இடங்களில் 12,500 வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படும், 100 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட உள்ளது. திருவிழா நாட்களில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், 5 இடங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டு 24 மணி நேரம் செயல்படக் கூடிய மருத்துவக்குழு அமைக்கப்படும். 400 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட உள்ளனர். 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 123 கோயில்களில் உள்ள 127 பசுமடங்களை மேம்படுத்த ரூ.20.48 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்!