கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மருத்துவக் கழகம் மத்திய அரசிடம் ஆக்ஸிஜன் அனுப்ப கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலா இரும்பு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ரயில் நேற்று முன்தினம் (மே.15) ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து புறப்பட்டு நேற்று (மே.16) சேலம் வழியாக திண்டுக்கல் வந்தடைந்தது. இதையடுத்து அங்கிருந்து இன்று (மே.17) பிற்பகலில் கிளம்பிய சிறப்பு ரயில், தூத்துக்குடி மீளவிட்டான் சரக்கு மாற்று ரயில்வே நிலையத்திற்கு வந்தடைந்தது.
தூத்துக்குடி வந்த சிறப்பு ரயிலை கனிமொழி எம்.பி. தலைமையில் தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வருவாய் அலுவலர் கண்ணப்பன், தென்னக கூடுதல் ரயில்வே மேலாளர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.