தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 25 ஆவது வெள்ளிவிழா கிளை திறப்பு விழா கோவில்பட்டி ராஜீவ் நகரில் இன்று (ஜன.21) நடைபெற்றது. தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகில் கூட்டுறவு வங்கியின் புதிய ஏடிஎம் திறப்பு, எட்டயபுரம் நெடுஞ்சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் பங்க் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர், 345 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 35 லட்சம் மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரேஷன் பணியாளர்களுக்கு ஊதியம் மாற்றி அமைப்பது குறித்து நிதித்துறை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு தற்போது முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் ரேஷன் கடை பணியாளர்கள் ஊதிய உயர்வை முதலமைச்சர் அறிவிப்பார்.
ரேஷன் கடைகளில், பரபரப்பான நேரத்தில் (peak hours) இன்டர்நெட்டை அனைவரும் பயன்படுத்தும் போது, இன்டர்நெட் வேகம் குறையும். அதனால் பயோமெட்ரிக் முறையில் சிறிது பாதிப்பு ஏற்படுகிறது. இது ரேஷன் கடைகளுக்கு மட்டுமல்ல, செல் போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு வேகம் குறையும் போது பிரச்னை வரும் என்றார்.