அமைச்சர் உதயநிதியின் செயல்பாடு 100% திருப்தி - அமைச்சர் சேகர்பாபு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயிலில் HCL நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் கட்டமைப்பு பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 'திருச்செந்தூர் கோயிலில் முதல்கட்டமாக 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, துணை மின் நிலையம், கோயில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. கோயில் சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதில், வரும் பிப்.3ஆம் தேதி ரூ.16 கோடி மதிப்பில் கோயில் சந்நிதானம் அமைந்துள்ள இடத்தில் உள்கட்டமைப்பு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுக்குள் இந்தப் பணிகள் நிறைவு பெற்று கோயில் கும்பாபிஷேகத்துடன் அனைத்து பெருந்திட்ட வளாகப் பணிகளும் நிறைவடையும்' எனத் தெரிவித்தார்.
பக்தர்களுக்கு இலவச கார் வசதி: 'நீதிமன்ற உத்தரவுபடி, பக்தர்களின் செல்போன் பாதுகாப்பு அறை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு நான்கு கார் இயக்கப்பட்டுள்ளது. இதில், பக்தர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். மேலும், புதியதாக கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியில் 100 அறைகள், 20 ஓட்டுநர்கள் தங்கும் அறைகளும் கட்டி முடிக்கப்பட்டு அடுத்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதத்திற்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என உறுதியளித்தார்.
அமைச்சர் பணியில் 100%: 'திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய வகையில் 'திராவிட மாடலை' அரசு உருவாக்கும் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுவிட்டார். அவரது செயல்பாடு திருப்தியாக உள்ளது.
இதுவரை அவருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு தலைவர் ஸ்டாலினின் பாராட்டுகளைப் பெற்று முன்னேறி வருகிறார். இதனையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் புத்தாண்டு அன்று பக்தர்கள் உரிய பாதுகாப்புடன் அனுமதிக்கப்படுவர்' எனக் கூறினார்.
இதையும் படிங்க:சாதிய கொடுமைகளை களைந்திடுக - மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்