மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு தூத்துக்குடி: வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்கள் கன முதல் மிக அதிகனமழை பெய்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அதிகனமழை கடந்த 17 மற்றும் 18ம் தேதி கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் மொத்தமும் வெள்ளத்தில் தத்தளித்தது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வருகை தந்தார். பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு இடங்களையும் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள நவதிருப்பதி கோயில்களில் முதல் ஸ்தலமாக விளங்கும் கள்ளபிரான் கோயிலில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார். அப்போது, இந்திய பிரதமர் நலமோடு இருக்க வேண்டும், நாடு நன்றாக இருக்க வேண்டும் என பிராத்தனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து, சாமி தரிசனம் முடித்து விட்டு கோயில் வளாகம் வரும் போது, பக்தர் ஒருவர் அமைச்சரிடம், கோயிலில் வெளிப்படையாகவும், சுகாதாரம் இல்லாமலும் கழிப்பறை உள்ளது. ஆகவே, சுத்தம் செய்து அருகே கழிப்பறை கட்டடம் கட்டியும், தற்போது உள்ள அந்த பொது வெளிக்கழிப்பறையை யாரும் உபயோகப்படுத்தாத வண்ணம் செய்ய வேண்டும். அதன் வழியாக பக்தர்கள் கடந்து செல்லும் போது மிக கடினமாக உள்ளது என்றார்.
அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகள் இதனை செய்கிறார்களோ இல்லையோ, தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் 1 மாதம் கழித்து இந்த பகுதியை வந்து பார்ப்பார். அப்போது இந்த பணி முடியவில்லை என்றால் நான் வருகிறேன். அந்த கட்டடம் கட்டுகின்ற வரை அந்த இடத்திலேயே நிற்பேன். அந்த பணி முடியும் வரை என தெரிவித்தார்.
அதற்கு, அதிகாரி உடனடியாக நான் செய்து தருகிறேன் எனக் கூறினார். அப்போது, அங்குள்ள கோயில் பூசாரி ஒருவர், அந்த திறந்த வெளிக் கழிப்பறை வழியாக தான் பெருமாள் வருவார் என கூறும் போது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனால் தான் கழிப்பறையை சுத்தம் செய்யாமல் உபயோகப்படுத்துகிறார்களா? என கேட்டார். பின்பு, பெருமாள் ஊர்வலம் வரும் போது, அந்த கழிப்பறை நீரைக் கடந்து தான் பொதுமக்களும் வருகிறார்கள். ஆகவே, அந்த பொது வெளிக் கழிப்பறையை சுத்தமாக தயார் செய்யுங்கள் என உத்தரவிட்டார்.
அப்போது, தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த கட்டடம் கட்ட நிதி எவ்வளவு ஆகும் என்று கேட்கபோது, உடனடியாக, அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீங்கள் ஏன் அதனை பற்றி கவலைப்படுகிறீர்கள். கோயிலில் பூசாரிகளுக்கு 3 ஆயிரம் கொடுப்பதற்கே ரேஷன் கடையில் அளந்து பார்த்து கொடுப்பவர்கள் பணம் நிறைய மீதி இருக்கும்.
பூசாரிகளுக்கு தான் சம்பளம் கொடுக்க முடியாது. ஏன் என்றால் அதற்கு ஒரு காரணம் உள்ளது. ஆனால் தெருப்பகுதியை சீரமைக்க கஷ்டம் இருக்காது. ஆகவே, அதனைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்றும், நயினார் நாகேந்திரன் நீங்கள் பெருமையாக சிஎஸ்ஆர் பணம் ஓதுக்குவேன் என்பீர்கள். அதற்கு வழி இல்லை. ஆகவே தமிழக அரசு அதிகாரிகளிடம் இருக்கும் பணத்தை வைத்து கட்டுவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிருக்குப் போராடிய காட்டெருமை.. உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்த வனத்துறையினர்.. தென்காசியில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்..!