தூத்துக்குடி : ஊரக உள்ளாட்சி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் குளம் புனரமைப்பு பணிகளை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
மீளவிட்டான் அருகே 132 ஏக்கர் பரப்பளவு கொண்ட சி.வ. குளத்தில் 11 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளான அவர் பார்வையிட்டார். சுமார் ரூ.50 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது வரை முடிக்கப்படவில்லை. அதை விரைவாக முடிக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் உள்ளாட்சித் துறை வளர்ச்சித் திட்டப் பணிகளையும் இன்று ஆய்வு செய்துள்ளோம் ".
நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் கே.என்.நேரு நகர்புற உள்ளாட்சி தேர்தல்
"நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல சில நகரங்கள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். அதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் பருவமழை காலம் தொடங்க உள்ளதால் மழைக்காலம் நிறைவு பெற்றதும் தேர்தல் தொடங்கும்"என்றார்.
ஆய்வின்போது, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் பல முக்கிய அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க :பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!