தூத்துக்குடி:தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள "Health Walk" திட்டத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம்" நிகழ்வு நடைபெற்றது. தினமும் 8 கீ.மீ., தூரம் நடப்பதை வலியுறுத்தும் நடைபயணத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் (செப்.29) இன்று பங்கேற்று தெற்கு பீச் ரோடு ரோச் பூங்கா முன்பில் இருந்து நடைபயணம் மேற்கொண்டனர்.
பின்னர், உலக இருதய தினத்தை முன்னிட்டு மருத்துவ மாணவிகள் மற்றும் செவிலியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடையில் பேசும்போது, “நான் எங்கு சென்றாலும் நடைபயிற்சி மேற்கொள்வதை சரியாக கடைபிடித்துக் கொண்டு வருகிறேன். நான் நடைபயிற்சி மேற்கொள்வது குறித்து செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வருவதை பார்க்கக்கூடிய எதிர்கட்சி தலைவர் ‘மா.சுப்பிரமணியனுக்கு வேற வேலையே இல்லை எங்கு சென்றாலும் நடந்து கொண்டே இருக்கிறார்’ என கேலி செய்கின்றனர்.
நான் மற்றவர்களைப் போல வீட்டில் அலங்காரத்திற்காக எட்டு போட்டு வைத்துக்கொண்டு மற்றவர்கள் கேட்டல், நடப்பதற்காக போட்டு வைத்து இருக்கிறேன் எனக் கூறுபவன் அல்ல. அதேபோல, அலமாரியில் அன்பளிப்பாக வரக்கூடிய புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டு, அனைத்து புத்தகங்களையும் படித்து விட்டேன் என கூறிவிட்டு, சமீபத்தில் என்ன படித்தீர்கள் என்று கேட்டால் முழிப்பவன் நான் கிடையாது.