தூத்துக்குடி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58.67 கோடி மதிப்பில் பேருந்து நிலையம், 28.87 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) தொடர்பான பூங்கா உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
பின்னர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுத்ததற்குப் பின் தொகுதியில் இருக்கக்கூடிய மூளை, மூடுக்கெல்லாம் சென்று மக்கள் குறைகளை அறிந்து உடனடியாக நிறைவு செய்யக்கூடிய ஒரு எம்.பியாக உள்ளார்.
சென்னையில் சிறிய மழை பெய்தாலும், தூத்துக்குடியில் மழை பெய்து தண்ணீர் வந்து விடுமோ என்று அச்சம் கொள்வார். அந்த அளவிற்கு தன்னுடைய எண்ணம் செயலில் தூத்துக்குடி தொகுதி வளம் பெற வேண்டும். இந்த தொகுதிக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என ஆர்வம் மிக்கவர்.
தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஒரு கேந்திரமாக விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பர்னிச்சர் பூங்காவில் தொழில் நிறுவனங்கள் வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அது மட்டுமன்றி தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை அமோனியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது’ என்று கூறினார்.
பின்னர், நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,‘நேற்றைய தினம் டெல்லிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சென்றது நாம் வரி வசூல் (ஜிஎஸ்டி) செய்து கொடுத்தை வாங்குவதற்கு தான். நாங்கள் வரிவசூல் செய்து கொடுத்ததை கேட்பதற்கு டெல்லிக்குப் போனால் எங்கள் பணத்தை நீங்கள் வைத்துக் கொண்டு உங்கள் நோட்டீசை (மோடி படம் பேருந்து நிலையத்தில் ஒட்டியது தொடர்பாக) கொண்டு ஓட்டுகிறீர்கள்.
அது எந்த வகையில் நியாயம், வந்தே பாரத் ரயில் எல்லாம் விடுகிறீர்கள். நாங்களா அதில் பயணம் செய்கிறோம். நீங்களே விட்டுக்கிறீங்க. நீங்களே போறீங்க. ஆனால் நாங்க ஒரு வேலை செஞ்சா அதுல வந்து நீங்க நோட்டீஸ் ஒட்ட என்ன காரணம்?