தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், இன்று (மே 26) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்திட குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து பணிகளையும் அலுவலர்கள் துரிதமாக நிறைவேற்றிட வேண்டும் எனவும், நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து அவற்றின் மூலம் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடவும், உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் நிறைவேற்றிட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து கூட்டம் நிறைவுற்ற பிறகு, அமைச்சர் உள்பட அதிகாரிகள் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “யூரின் போறது, வெளிய (மலம் கழித்தல்) போறது, தண்ணீர் குடிக்கிறது, லைட்டு போடுறது, குடிசை கட்டுறது அப்டினு அத மட்டும் கேளுங்க..” என கூறிவிட்டு புறப்பட்டார். அதேநேரம், எம்பி கனிமொழியிடம் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கு கொள்ள கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, எந்த பதிலும் கூறாமல் புறப்பட்டுச் சென்றார்.