இலங்கை திரிகோணமலை வடக்கே கரையைக் கடந்த புரெவி புயலானது தமிழ்நாட்டில் குமரி-பாம்பன் இடைப்பட்ட பகுதியில் இன்று கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாடு மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் புயல் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 21 கடலோர கிராம பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வுசெய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயலால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் தங்குவதற்காக 96 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3500 நாட்டுப் படகுகள் உள்ளிட்ட அனைத்துப் படகுகளும் கரைக்குத் திரும்பியுள்ளன.
புயல் எச்சரிக்கை சமயத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 72 படகுகளும் சாட்டிலைட் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து மீனவர்களும் கரை திரும்பியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.