கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஆக.7) இடுக்கி மாவட்டம், ராஜமலைப் பகுதியில் கடும்நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பெட்டிமுடி பகுதியில் தங்கியிருந்த கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில், பலர் தமிழ்நாட்டின் கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், கயத்தாறு பாரதிநகர் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பெற்றோரை இழந்து தவிக்கும் சரண்யா, அன்னலட்சுமி, விஜய் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இடுக்கி மாவட்டம், ராஜமலை பெட்டிமுடி தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் இன்று(ஆகஸ்ட் 10) காலை வரை 42 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள். கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 28 பேரைத் தேடும் பணி நடைபெறுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.