தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் வளாகத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி அரசு பொருட்காட்சி தொடங்கியது. இந்த பொருட்காட்சியில் அரசு மற்றும் அதன் துறைகளின் சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பொருட்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமை தாங்கினார். விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சிறந்த அரங்குகள் அமைத்த துறைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அத்துடன், 892 பயனாளிகளுக்கு 1 கோடியே 96 லட்சத்து 36 ஆயிரத்து 925 ரூபாயக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில் அமைச்சர் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் சுற்றுலாத் தலமாகும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு 100 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. அதிமுகவில் பிரிந்து மாற்று சக்தியாக யாரும் நிலைத்ததாக வரலாறு இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் பலர் தேர்தலை சந்தித்தாலும் வெற்றி பெற்றதாக வரலாறும் இல்லை என்பது தற்போதைய தேர்தல் முடிவு மூலமாக அது நிரூபணமாகியுள்ளது.
தினகரன் கட்சியில் இணைய வந்தால் அது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவெடுப்பார்கள். நடந்த தேர்தலில் மக்கள் மக்களவைக்கு ஒரு தீர்ப்பும், சட்டமன்றத்துக்கு வேறு தீர்ப்பும் வழங்கியுள்ளனர். இந்த ஆட்சி தொடர 4 இடங்கள் போதுமானது என்ற நிலையில், 9 இடங்களில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். 122 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் ஆதரவுடன் இந்த ஆட்சி 2021ஆம் ஆண்டு வரை தொடரும், என்று தெரிவித்தார்.
பரிசளிப்பு விழாவில் அரசு துறைகளில் சமூக நலத்துறைக்கு முதல் பரிசும், வனதுறைக்கு 2ஆம் பரிசும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 3ஆம் பரிசும் வழங்கப்பட்டது. அரசு சார்ந்து செயல்படும் துறைகளில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு முதல் பரிசும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு 2ஆம் பரிசும், பேரூராட்சிகள் துறைக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.