கரோனாவின் தாக்கம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதற்கிடையில், அந்த நடவடிக்கையில் பங்களிக்கும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களால் உற்பத்தி செய்யப்படும் முகக்கவசம், கிருமி நாசினி, லைசால் உள்ளிட்ட 8 பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள் கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய பகுதிகளில் புதிதாகத் திறக்கப்பட்டது.
இந்தத் திறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விற்பனை அங்காடிகளை திறந்து வைத்தார். கோட்டாட்சியர் விஜயா, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசிய காணொலி இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட கரோனா வைரஸ் பெருந்தொற்று தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் தனித்து இருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. அதை கடைப்பிடிக்கத்தான் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக ஊடகங்களும் தினமும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, காவல் துறை ஆகியவை இணைந்து வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை மட்டும் தனிமைப்படுத்தி, தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால், இங்கு சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கப்பல்கள் வந்ததாக பத்திரிகைகளின் வாயிலாக மக்களை சென்றடைந்தது.
இந்த கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் துறைமுகத்திலிருந்து 15 கடல் மைல் தூரத்துக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் அதைப்பற்றி யாரும் அச்சப்பட தேவையில்லை. அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்களிடம் எதிர்பார்ப்பது ஒத்துழைப்பு ஒன்றை மட்டும்தான். மக்கள் விழிப்புடன் தனியாக இருக்க வேண்டும். வேறு எந்த பங்களிப்பையும் அரசு எதிர்பார்க்கவில்லை” என்றார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கரோனா அறிகுறியுடன் மூவர் அனுமதி