தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 93 ஆயிரத்து 895 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 123 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், "யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கொடுக்க வேண்டும் என்பதை கட்சியின் தலைமை முடிவு செய்யும். நாடாளுமன்றத் தேர்தலின்போது எங்களுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் அப்படியே தொடரும்.
அந்த வகையில் பிஜேபி, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் தொடர்கின்றன. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தோம். அதுபோல 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அழகிரியின் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற திமுகவின் வெறி ஒருகாலும் நடக்காது - அமைச்சர் கடம்பூர் ராஜு!