தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரில் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சருமான கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனம் முதுமை காரணமாக நேற்றிரவு இயற்கை எய்தினார். தகவலறிந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று அதிகாலை 5 மணி அளவில் கடம்பூர் வடக்கு ரத வீதியில் உள்ள அவரது வீட்டில் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனம் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “ஒரு அரசியல்வாதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பெரியார் வழி நின்று அண்ணாவின் தம்பியாய் எம்ஜிஆரின் நம்பிக்கையாய் ஜெயலலிதாவிற்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம் விசுவாசமாக இருந்தவர்.
எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டு 1984 மக்களவைத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு ஜெயலலிதாவால் இரண்டு முறை மக்களவை வேட்பாளராக களம் இறக்கப்பட்டு 1984, 89, 91 ஆகிய மூன்று முறை திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறையும் தொடர் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். 1998இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நான்காவது முறையாக வெற்றி பெற்று வாஜ்பாய் அரசில் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு அதேபோல், அதிமுக-வின் மாவட்ட செயலாளராக தலைமை கழக பேச்சாளராக மக்களுக்கு எளிதாக கருத்துக்களை கொண்டு செல்வதில் வல்லவராக விளங்கினார். மத்திய அமைச்சராக இருந்தபோதிலும் தன்னிலை தாளாமல் எங்களைப் போன்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். அவருடைய மறைவு திராவிட இயக்கத்திற்கும் அதிமுகவுக்கும் பேரிழப்பு” என்றார்.
இதையும் படிங்க...நெருங்கும் தேர்தல் மீண்டும் ஆட்சியமைக்குமா அதிமுக ?