விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்த நாள் விழா இன்று (செப்.05) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச் சிலைக்கு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வ. உ சிதம்பரனாரின் முழு உருவச் சிலைக்கும் அவர் மரியாதை செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியிடுவது என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதது. தற்போது திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் உள்ளிட்டவை ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு கேளிக்கை வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் தீர்க்கமாக முடிவு செய்தால் தமிழ்நாடு அரசு அதனை நடைமுறைப்படுத்தும். ஓடிடி தளத்தில் பிற்காலத்தில் நாடகத் தொடர்களும்கூட வெளியாகலாம். எனவே கேளிக்கை வரி விதிப்பு பற்றி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதைப்பொறுத்து தமிழ்நாடு அரசு முடிவு செய்யும்” என்றார்.