தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டிய பட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழ்நாடு அரசின் நிதி ஒதுக்கீட்டின் பேரில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
முன்னதாக தூத்துக்குடி மாநகரில் மாநகராட்சி சார்பில் முடிவு பெற்ற திட்ட பணிகள் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாவட்டம் முழுவதும் முதலமைச்சர் வந்து செல்லும் வழிகளிலும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திறந்து வைக்க உள்ள மருத்துவ சிகிச்சை பிரிவுகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துணை ஆட்சியர் சிம்ரன் சிங் ஜித்கலோன், சண்முகநாதன் எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பத்திரிகை உலகின் ஜாம்பவான் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் நாளை திறந்து வைக்கப்படுகிறது. அதைப்போல பத்திரிகையாளர் நலனுக்காக நல வாரியம் அமைப்பது குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து நல வாரியம் அமைப்பது குறித்த அம்சங்களை ஆராய்வதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். அந்தக் குழு ஆய்வு செய்து விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அறிக்கை வந்ததும் அதில் அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைக்கப் பெற்று விரைவில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்” என்றார்.