தூத்துக்குடி:தமிழக உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வுக்கு படி மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
நான் முதல்வன் – உயர்வுக்குப்படி ஸ்பாட் அட்மிஷன் பெற்றதற்கான ஆணை 10 பேருக்கும், கல்விக்கடன் பெறுவதற்கான ஆணை 14 பேருக்கும், சத்துணவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். மேலும், புதுமைப்பெண் - திட்ட விளக்க கையேடுகள் 10 பேருக்கு மற்றும் நான் முதல்வன் - உயர்வுக்குப்படி புத்தகங்கள் 10 பேருக்கும் வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “வாழ்க்கையில் மிகவும் இனிமையான பருவம் கல்லூரி பருவம். கல்லூரி காலத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். நீங்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். மேலும், சிந்திக்க கற்றுக்கொள்வதுடன் இந்த வயதில் முடிவெடுக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமையும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்ளலாம். கல்லூரிக்காலம் உங்களை பட்டை தீட்டிக்கொள்ளும் காலமாகும். வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழிலதிபர் ஆவதற்கும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான திட்டம்தான் நான் முதல்வன் திட்டமாகும்.