தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் பணியாற்றும் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களுக்கு அரிசி, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய நலத்தொகுப்பு, கரோனா நிவாரணத் தொகை 4 ஆயிரம் ரூபாயை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், "சொன்னதைச் செய்கிற அரசாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இருக்கிறது. கரோனா உதவித்தொகை பொதுமக்கள், காவலர்கள், மருத்துவர்கள் மட்டுமல்லாது கோயில்களில் மாத ஊதியம் இல்லாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்பட அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பணியாற்றும் 106 பணியாளர்களுக்கு அரசின் அத்தியாவசிய தொகுப்புகள் அடங்கிய பொருள்களும், 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதேபோல திமுக ஆட்சிக் காலத்தில்தான் எண்ணற்ற கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
தூத்துக்குடி பெருமாள் கோயிலுக்கு கூடிய விரைவில் குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அறநிலையத் துறைக்கு தேவையான அனைத்து தேவைகளையும் கேட்டு வாங்கித் தரப்படும். பணியாளர்களின் பிரச்னைகள் எதுவாயினும் அதற்கு உடனுக்குடன் தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கும் ராகுல் - உதயநிதி வாழ்த்து